புதிய அரசின் ஆட்சியிலும் வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்கின்றன! - ஐ.நா குழு

சிறிலங்காவில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரும், வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் துணைத் தலைவர் பெலிஸ் காயர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜெனிவாவில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமான  சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் 59ஆவது கூட்டத்தொடரிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 'சிறிலங்காவில் கடந்த ஆண்டிலும் வெள்ளை வான் கடத்தல்கள் இடம்பெற்றிருப்பதாக அரசசார்பற்ற நிறுவனங்கள் சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளன.

2012ஆம் ஆண்டு தொடக்கம் 2016ஆம் ஆண்டு  ஒக்ரோபர் மாதம் வரையான காலப்பகுதியில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்போர் சிறிலங்கா பொலிஸாரால் சித்திரவதை செய்யப்பட்டமை தொடர்பாக 100க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன' என்றும் சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் துணைத் தலைவர் பெலிஸ் காயர் தெரிவித்துள்ளார்.

சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் 59ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பான மீளாய்வு இன்றும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.