படையினர் நிறுவும் விகாரைகளையே அகற்றக் கோருகின்றனர் தமிழ் மக்கள்! - சிறிதுங்க ஜயசூரிய
'யாழ். நயினாதீவில் உள்ள விகாரையையோ அல்லது ஆரியகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள விகாரையையோ அகற்றுமாறு தமிழ் மக்கள் கோரவில்லை. சுpறிலங்கா படையினரின் உதவியுடன் சிங்கள மக்கள் இல்லாத பிரதேசங்களில் அமைக்கப்படும் விகாரைகளையே அகற்ற வேண்டும் என்று தமிழ் மக்கள் கோருகின்றனர்.'   இவ்வாறு இலங்கையின் இனப்பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்ற தலைப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு, யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போது ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜெயசூரிய தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'நாடு சுதந்திரம் அடைந்து எழுபது வருடம் நிறைவடைகின்ற இந்தக் கால கட்டத்தில் இனப்பிரச்சினை ஒரே இடத்திலேயே நிற்கின்றது. நயினாதீவில் உள்ள விகாரையையோ அல்லது ஆரியகுளத்தடியில் இருக்கும் விகாரையையோ அகற்ற வேண்டும் என்று தமிழ் மக்கள் யாரும் எந்தக் காலத்திலும் சொன்னதில்லை. மாறாக சிங்கள மக்கள் இல்லாத பிரதேசங்களில் அநாவசியமற்று படையினரின் உதவியுடன் கட்டப்படும் விகாரைகளைத் தான் தமிழ் மக்கள் விரும்பவில்லை. அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோயில் பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டது. அதனை தடுத்திருக்க வேண்டிய பொலிஸாரே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அதற்குப் பின்னால் அமைச்சர் தயா கமகே இருக்கிறார். இனப்பிரச்சினை என்பது எல்லோருக்கும் விளையாட்டாக இருக்கின்றது. அதனை விடுத்து புதிய பாதைக்கு வரவேண்டும்' என அவர் மேலும் தெரிவித்தார்.