படைத்தரப்பு மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிறிலங்கா உரிய பதில் தரவில்லை! - ஐ.நா

'இலங்கையின் மனிதவுரிமை நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டு, சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்படும் கடத்தல்கள், சித்திரவதைகள், மற்றும் பாலியல் வன்முறைகள் குறித்து சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா ஆணைக்குழு சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.';

இவ்வாறு சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூகா கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்று வரும் சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா ஆணைக்குழுவின் 59ஆவது கூட்டத் தொடரில் இலங்கையில் இடம்பெறும் சித்திரவதைகள் தொடர்பாக விவாதிக்கப்படும் நிலையிலேயே, அவர் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 'சிறிலங்காவின் படையினரும், புலனாய்வுப் பிரிவினரும் தொடர்ந்தும் தமிழ் மக்களை இலக்கு வைக்கின்றனர்.  அவர்களை சட்டவிரோத முகாம்களில் தடுத்து வைத்து சித்திரவதை செய்கின்றனர். பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்துகின்றனர்.

அவர்களின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக  சிறிலங்கா அரசாங்கத்தால் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாத நிலையிலேயே அவர்கள் இதனை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக சிறிலங்காவின் படைத்துறையை மறுசீரமைப்பதற்கான முழுமையான நிகழ்ச்சித் திட்டம் ஒன்று வரையப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.  

2015ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், சிறிலங்காவின் படையினரும், புலனாய்வுப் பிரிவினரும் தொடர்ந்தும் தமிழ் மக்களை இலக்கு வைத்து செயற்பட்டு வருகின்றனர். ஆள்கடத்தலும் சித்திரவதையும் மிகவும் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படுகின்றன. அவை படையினரின் மரபணுக்களில் ஆழமாக உறைந்துபோயுள்ளன.

சிறிலங்காவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னரும் இத்தகைய குற்றங்களைத் தடுத்த நிறுத்த முடியாதுள்ளது. இவ்வாறான குற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு சிறிலங்காவில் அரசியல் உறுதிப்பாடு ஒன்று தேவைப்படுகிறது. இதற்காக சிறிலங்கா அரசாங்கம் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட வேண்டிய அவசியமுள்ளது.

சிறிலங்காவின் தற்போதைய ஆட்சிக் காலத்தில் படையினர் மற்றும் புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டு, சித்திரவதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கும், பாலியல் வன்கொடுமைகளுக்கும் உட்படுத்தப்பட்ட 36 தமிழர்களிடம் ஐரோப்பிய நாடுகளில் வைத்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 10 பேரின் அகதி கோரிக்கை ஐரோப்பிய நாடுகளால் ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் தற்போதைய ஆட்சிக் காலத்தில் கடத்தப்பட்ட 36 பேரில் 9 பேர் வடக்கிலுள்ள படை முகாம்களிலேயே தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர். எங்கள் அமைப்பிடம் ஒட்டுமொத்தமாக 200 இலங்கைத் தமிழர்களின் சாட்சியங்கள் உள்ளன. அவர்கள் போர்க்குற்றங்கள், போருக்குப் பிந்திய காலத்தில் சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் ஆகியவற்றை அனுபவித்து இலங்கையிலிருந்து தப்பியோடியவர்கள். இவ்வாறான குற்றங்களை இழைத்த சில குற்றவாளிகளையும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு  அடையாளம் காணத் தொடங்கியுள்ளது.

'இலங்கையில் இன்னமும் சித்திரவதை இடம்பெறுகின்றது என்பதையும், நான் எவ்வாறான சித்திரவதைகளை அனுபவித்தேன் என்பதையும் சர்வதேச சமூகத்துக்கு தெரியப்படுத்த நான் விரும்புகிறேன்' என வடமாகாணத்தில் இவ்வாண்டு வெள்ளை வானில் கடத்தப்பட்டு கூட்டாகப் பாலியல் வன்புணர்விற்கு உட்பட்ட பாதிக்கப்பட்ட தமிழ் யுவதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவுக்கு சிறிலங்கா அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாட்டை ஐ.நா உட்பட சர்வதேச  சமூகம் கொண்டுள்ளது.

இலங்கையில் தொடரும் இத்தகைய குற்றச் செயல்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் விழிப்புடன் செயற்பட வேண்டும். அரசியல் நலன்களுக்காக வன்முறைகளால் பாதிக்கப்படும் மக்களின் அவலங்கள் மூடிமறைக்கப்படக் கூடாது' என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆராய்ந்து தனக்கு ஆலோசனை வழங்குமாறு ஐ.நாவின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட நிபுணர் குழுவில் யஸ்மின் சூகாவும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.