நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளை உருவாக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தாமதிக்கிறது: ஸ்டீபன் ஜே ராப் {போர்க்குற்ற விவகாரங்களுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் }

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளை உருவாக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தாமதித்து வருவதாக போர்க்குற்ற விவகாரங்களுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ஸ்டீபன் ஜே ராப் தெரிவித்துள்ளார்.

இது இலங்கையில் இடம்பெற்ற போரில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு உண்மை மற்றும் நீதியை வழங்குவதை தவிர்க்கும் முயற்சியாக இருக்கக் கூடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹேக்கில் நடைபெற்று வரும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கான அரசதரப்புகளின் அவைக் கூட்டத்தில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவராகப் பணியாற்றிய ஸ்டீபன் ஜே ராப் தற்போது கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், சிறிலங்காவின் நிலைமாறு கால நீதிப்பொறிமுறைகள் தொடர்பில் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 'நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான வழக்குத்தொடுனர் பணியகத்தை சிறிலங்கா அரசாங்கம் இதுவரை உருவாக்கவில்லை.

இதற்கான ஆரம்பக்கட்ட பணிகளைச் செய்யாமல், பொறுப்புக்கூறல் தொடர்பான நீதிமன்றத்தை உடனடியாக அமைக்க முடியாது. போர்க்குற்ற விசாரணைகளுக்காக சிறிலங்கா அரசாங்கம் விசாரணை அலகுகளையும், வழக்குத்தொடுனர் பணியகத்தையும்  அமைக்க முடியும். அப்போது தான் போர்க்குற்றம் சுமத்தப்பட்ட வழக்குகளை உடனடியாக ஆரம்பிக்க முடியும். 

நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளை உருவாக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தாமதித்து வருவதானது, போரில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு உண்மை மற்றும் நீதியை வழங்குவதை தவிர்க்கும் முயற்சியாக இருக்கக் கூடும். 

உண்மையைக் கண்டறிதலில் தான் நீதிச் செயல்முறைகள் ஆரம்பிக்கும். உண்மையைக் கண்டறிதலில் இருந்து நீதியை வழங்குவது வரை  சிறிலங்கா அரசாங்கத்துக்கு இது அவசியம்.