தமிழ் மக்கள் பேரவையுடன் கைகோர்த்து செயற்படமுன்வருமாறு புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு அழைப்பு

தமிழ் மக்களின் நீதிக்கான பயணத்தின், மிகமுக்கியமான காலகட்டமொன்றில் இன்று நாம் நிற்கின்றோம்.
எமது இனம் எதிர்நோக்கும் இந்த சிக்கலான சவால்களை ,தனிநபர்களாகவோ அல்லது தனி அமைப்புகளாகவோ தனித்தனியாக எதிர்கொள்வதை விட, நாம் அனைவரும் எம் மக்களிற்கான நீதி எனும் ஒரு கொள்கையின் கீழ் ,ஒன்றிணைந்து இவற்றை  எதிர்கொள்வதே பொருத்தமானதாகவும் வலிவானதாகவும் இருக்கும் என நாம் திடமாக நம்புகிறோம்.

நீண்டகாலத்திட்டமிடலுடன் , காலம் காலமாக எமக்கெதிராக மேற்கொள்ளப்படுகின்ற கட்டமைக்கப்பட்ட அநீதிகளை எதிர்கொள்ள , எம்மிடமும் நீண்டகால நோக்குடன் கூடிய, முறையான திட்டமிடப்பட்ட , இனத்தின் நலனை மட்டும் முன்னிலைப்படுத்திய ஒருங்கிணைக்கப்பட்ட அணுகுமுறை இருத்தல் வேண்டும்.

இத்தகைய ஒரு எண்ணக்கருவுடனேயே தமிழ் மக்கள் பேரவை கடந்த வருடம் உருப்பெற்றிருந்தது. எமது மக்களையும் பெரும்பாலான அமைப்புகளையும் , இனத்தின் நன்மை எனும் பொது நோக்கின் கீழ் ஒன்றுதிரட்டி , கடந்த ஒருவருட காலத்துக்குள் குறிப்பிடத்தக்க அளவுக்கு செயற்படவும் எம்மால் முடிந்துள்ளது.
தொடரும் எமது இச்செயற்பாடுகளோடு  எம் தேசத்தின் பிரிக்கமுடியாத ஒரு அங்கமாகிய எம் புலம்பெயர் அமைப்புகளை  எம்முடன் கைகோர்த்து செயற்படமுன்வருமாறு உரிமையுடன் நாம் கேட்டுக்கொள்கிறோம்.

எம்மிடையேயான வேறுபாடுகள் அனைத்தையும் எமக்காக செய்யப்பட்ட அர்ப்பணிப்புகளின் பெயரால் களைந்து , ஒன்றிணைந்த செயற்பாட்டுக்கு தமிழ் மக்கள் பேரவையுடன் கைகோர்க்குமாறு இனம்சார்செயற்பாடுகளில் ஈடுபடும் புலம்பெயர் அமைப்புகளை வேண்டிநிற்கின்றோம்.

தோழமையுணர்வுடன் எம்முடன் இணைந்து பயணிக்க விரும்பும் புலம்பெயர் அமைப்புகளை , எமது இணையத்தளத்தின் தொடர்பாடல் பகுதியினூடாகவோ அல்லது எமது உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரியினூடாகவோ எம்மை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்பு கொள்ளும் அமைப்புகள், தங்கள் செயற்பாடுகள், வேலைத்திட்டங்கள், நோக்கு என்பவை அடங்கிய சிறுகுறிப்பொன்றையும் எமது தொடர்பு முகவரிக்கு அனுப்பிவைப்பதன் மூலம் உங்களுடனான புரிதலை இலகுவாக்க எமக்கு உதவமுடியும்.
தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தொடர்களில் இது தொடர்பான கலந்துரையாடலின் பின்னர், நாம் இணைந்து செயற்படகூடியவகையில் உங்களை , நாம் தொடர்புகொள்ளுவோம். இனம் சார்ந்த இணைந்த செய்ற்பாட்டிற்காக, நீங்கள் மேற்கொள்ளும் வேலைத்திட்டங்களை எம்முடன் நேரடியாக பகிர்ந்துகொள்ளவிரும்புபவர்களும் எமது தொடர்பாடல் பகுதியினூடு எம்மை தொடர்புகொள்ளவும். 

 

தொடர்புகளுக்கு:- 
tpcofficalmail@gmail.com
http://tpcouncil.org/page/contact

நன்றி.
தமிழ் மக்கள் பேரவை 
11/12/2016