தமிழ்மொழியின் வரலாறும் எதிர்கால இருப்பும்

சமூகக்கூா்ப்பில் உலகமயமாக்கலின் செல்வாக்கு, அதன் விளைவால் விரைவுபடுத்தப்பட்ட சமூக அரசியல் மாற்றங்கள் போன்றன பல சமூகங்களின் இருப்பினைக் கேள்விக்குறியாக்கி நிற்கும் இன்றைய நிலையில் இச்சமூகங்கள் தம் சுய அடையாளத்தினை நிலைநிறுத்தி இருப்பை உறுதிசெய்யும், செய்யவிளையும் நிலை உலகெங்கணும் காணப்படுகின்றது. இந்நிலை தமிழ்ச்சமூகத்திற்கும் பொருந்தும் எனினும் எந்த அளவு இந்நிலை பற்றிய விழிப்புணா்வு சமூகமட்டத்தில் உள்ளதென்பது சிந்திக்கவேண்டிய ஒன்றாகும். “கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய முத்தமிழ்” என பழம்பெருமை பேசும் தமிழ்ச் சமூகம் தன்னிருப்பை உறுதிசெய்ய தூரநோக்குடன் கூடிய எத்தகைய செயற்றிட்டங்களை வகுத்துள்ளது என்பது சிந்தனைக்குரியது.

பல்லாயிரம் வருடங்களாக படையெடுப்புக்கள், ஆக்கிரமிப்புக்கள், வலிந்ததிணிப்புக்கள் என பல்வேறுபட்ட எதிர்மறை புறச்சூழல்களிலும் நின்று நிலைத்த தமிழும், தமிழ்ச் சமூகமும் இன்றைய நிலையில் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் முற்றிலும் வேறுபட்டவை. முன்னெப்போதும் இல்லாதவகையில் அந்நிய மொழிகள் மற்றும் கலாசாரங்களின் தொடா்புகள், அதனால் நிகழும் மாற்றங்கள் என்பன எதிர்காலத்தில் எம்மிருப்பை வேரறுக்கலாம். இனத்துவ அடையாளத்தின் ஆணிவோ் மொழியே. மொழியின் அழிவு என்பது இன, பண்பாட்டு அடையாளங்களையே அழித்து எம்மை வேரறுந்தவா்களாக, அடையாளமற்றவா்களாக ஆக்கிவிடலாம். உலகெங்கும் பரந்துவாழும் தமிழா்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மேற்கொள்ளும் முயற்சிகள் எந்த அளவிற்கு வெற்றியளிக்கும் என்பது சிந்திக்கப்படவேண்டிய ஒன்று. ஏனெனியல் பெரும்பாலான இச்செயற்றிட்டங்கள் தனியொருவரின் முயற்சியாக, அல்லது ஓா் சிறு குழுவினரின் தன்னார்வ முயற்சியாகவே அமைகின்றன. உலகளாவிய ரீதியில் ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சிகள் அவசியமெனினும் இதனைச் செயற்படுத்தும் உலகத்தமிழா்களை ஒருங்கிணைக்கும் ஓா் வலுவான அமைப்பு இல்லாதது ஓா் பாரிய குறைபாடாகும். இந்நிலை தொடரின் சுமேரியன், அக்காடியன் போன்ற தொன்மொழிகளுக்கு நிகழ்ந்ததே எதிர்காலத்தில் தமிழிற்கும் நிகழலாம். இந்நிலை தவிர்க்கப்படவேண்டுமெனின் காலத்தின் தேவையுணா்ந்து விஞ்ஞான, தொழிநுட்ப விடயங்களை கையாளும் வகையில் தமிழ் பரிமாணிக்கவேண்டும். இல்லையெனில் வாழ்வியல் தேவைகளினின்றும் அந்நியப்பட்டு நிற்கும் மொழியானது அழிவுப்பாதையில் செல்வது தவிர்க்க முடியாததாகிவிடும்.

உலகின் மிகப் பழமையான மொழிகளில் இன்றும் வழக்கிலிருப்பவை தமிழும் சீனமுமே. சமஸ்கிருதம், லத்தீன் போன்றன இறந்த மொழிகளாக, சடங்குமொழிகளாக மட்டுமேயுள்ளன. தமிழ்மொழியின் வரலாற்றை மீள்நோக்குவது அதன் எதிர்கால இருப்பை உறுதிசெய்வதற்கான அடிப்படைகளைக் கண்டறிய உதவும். தமிழின் தோற்றம் எங்கு நிகழ்ந்ததென்பது பெரும் விவாதத்திற்குரியதொன்றாகவே இன்றுவரையுள்ளது. ஆசியாவையும் ஆபிரிக்காவையும் இணைத்த ஒரு பெரு நிலப்பரப்பு இருந்ததாகவும், குமரிக்கண்டம் என அழைக்கப்பட்ட இந்நிலப்பரப்பில் தமிழ் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே தோன்றியதாகவும், பெருவளா்ச்சி கண்ட நாகரிக சமுதாயத்தின் தொடா்பியல் மொழியாக விளங்கியதாகவும் பல்வேறு அறிஞா்கள் பகன்றபோதும் இதுவரை இத்தகையதொரு நிலப்பரப்பு இருந்ததற்கான ஆதாரங்கள் விஞ்ஞான பூா்வமாக வெளிப்படுத்தப்படவில்லை. கடந்த தசாப்தத்தில் இந்தியாவின் புதுச்சேரியை அண்மித்த கடற்படுக்கையில் பாரிய நகரமொன்றின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டும், இவை பல்லாயிரம் வருடங்கள் பழமையானவை எனவும், குமரிக்கண்ட நாகரிகத்தின் எச்சசொச்சங்கள் எனவும் கூறப்படுகின்றபோதும் இவ்ஆய்வு முயற்சிகளைத் தொடர பல்வேறு மறைமுகத்தடைகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஏனெனில் இத்தகைய கண்டுபிடிப்புகள் இந்திய சமூக, அரசியல் வரலாற்றையே மாற்றியமைக்கலாம். இந்துத்துவக் கோட்பாடும், பிராமணிய ஆதிக்கமும் செல்வாக்குச் செலுத்தும் ஆரிய மேலாண்மைக் கருத்தின் செல்வாக்கிற்குட்பட்ட கொள்கை வகுப்பாளா்களும், அரசியல் தலைமைகளும் தமது கருத்தியல் கட்டுமானத்தின் அடித்தளமே ஆட்டங்காண்பதை விரும்பவோ, அனுமதிக்கவோ போவதில்லை. எனவே இவ்வுண்மை தெளிவு பெற நீண்டகாலம் செல்லலாம்.

தமிழ்மொழி பற்றிய இன்னொரு கருத்து யாதெனில் இந்தியாவில் ஆரியா்வருகைக்கு பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே மத்திய தரைக்கடற்பகுதியிலிருந்து வந்து இந்தியாவில் குடியேறியோரே திராவிடத்தமிழா்கள் என்பதாகும். இதற்கு கெலனிய நாகரிகத்திற்கு முந்திய மத்தியதரைக்கடல் பகுதியில் வாழ்ந்த சமூகங்கள், குறிப்பாக கிரேட்தீவு சமூகம் பயன்படுத்திய மொழி பற்றிய ஆய்வுகள் மற்றும் இடப்பெயா் ஆய்வுகள் போன்றன ஆதாரமாகக் காட்டப்படுகின்றன. ஆனால், மறுபுறம் இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து திராவிடா்கள் மத்தியதரைக்கடல் பகுதிக்குச் சென்றிருக்கலாம் என விவாதிப்போரும் உண்டு.

இதனைப்போன்றே பல்வேறு ஆபிரிக்க மொழிகளுடன் தமிழை ஒப்பிட்டு ஆபிரிக்கக் கண்டத்திலிருந்து ஆரியா் வருகைக்கு முன்னரே இந்தியாவிற்கு வந்தோரே தமிழா்கள் என்போருமுளா். இதனைவிட சில கோட்பாடுகள் தமிழையும் கெல்ரிக் மொழிகளையும் பகுப்பாய்வு செய்து ஐரோப்பாவில் நவீன மனிதா்களின் வருகையுடன் முகிழ்ந்த முன் திராவிட மொழியே கெல்ரிக் மொழிகளுக்கும் தமிழுக்கும் ஆதித்தாய்மொழியென விவாதிக்கின்றனா். ஆயினும், இவ்எந்தவொரு கோட்பாடும் ஐயந்திரிபற நிரூபிக்கப்படாமையால் தொல்தமிழின் தோற்றம் பற்றிய தெளிவின்மை தொடா்கின்றது. தெளிவினைக் காணவேண்டுமெனின் மொழியியல், புதைபொருளியல், மானிடவியல் மற்றும் மரபுரிமையியல் என பல்துறைசார் அறிஞா்களின் கூட்டுமுயற்சி அவசியம். ஆயினும், இத்தகையதொரு முயற்சியை மேற்கொள்வது யார்? என்பது தொக்கிநிற்கும் வினாவாகும்.

வரலாற்றைப் புரிந்துகொள்ளல், அது தொடா்பான நிரூபணங்களை பெறவிளைதல் என்பவை அடையாளத்தை நிலைநிறுத்துவதற்கு அத்தியாவசியமானது. அத்துடன் நின்றுவிடாது காலத்தின் தேவையறிந்து, தமிழை சமூக இயங்கியலுக்கேற்றவகையில் விஞ்ஞான, தொழிநுட்ப மொழியாக பரிணமிக்கச் செய்வது மொழியின் இருப்பிற்கு அடித்தளம் அமைக்கும்.

த. அருணகிரிநாதன்
ஆங்கில போதனாசிரியர்
யாழ்.பல்கலைக்கழகம்