செட்டிக்குளம் சந்திரசேகரர் ஆலயம்

 இவ்வாலயம் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் கப்பாச்சி என்ற காட்டுப்பிரதேசத்தில் அழகான ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயம் தோன்றிய வரலாறு, அதன் காலம், ஆலயத்தின் சிறப்பு பற்றிய ஐதீகங்களும், வாய்மொழிச் செய்திகளும் அப்பிரதேச மக்களிடையே காணப்படுகின்றன. இவ்வாலயம் தோன்றி வளர்ந்த வரலாறு பற்றி வன்னியில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆய்வு நடாத்திய ஜே.பி லுயிஸ் பின்வருமாறு கூறுகிறார். செட்டிகுளத்தில் கலியுககாலம் 3348 இல் மதுரையில் இருந்து வந்த ஒரு செட்டியும், அவர்களுடன் வந்த முத்துக்குளிக்கும் பரதவரும் குடியமர்ந்தனர். இவர்கள் இலங்கைக் கடற்கரையில் கப்பல் உடைந்து கரையொதுங்கியவர்களாவர். மேலும் அவர் இவ்வாலயம் பற்றிக் கூறுகையில் வீரநாராயணன் செட்டி என்பவன் அடங்காப்பற்றுக்கு வந்து செட்டிகுளத்தில் குடியேறி வெளவாலை எனும் கேணியை வெட்டிக்கட்டி சந்திரசேகரசுவாமிக்கு திருக்கோயில் ஒன்றை கட்டினான். கோவிலுக்கு அண்மையில் உள்ள ஒரு கிணற்றில் கோவில் செல்வத்தைப் புதைத்தார். இச்செல்வம் அனைத்தையும் காவுவதற்கு அறுபது யானைகள் தேவைப்பட்டன இப்புதையலைக் காக்க சடாமுனி எனும் பிசாசையும் விட்டுச்சென்றார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து வீரநாராயண செட்டி இறந்தார்.


              இக்கூற்றில் நம்பமுடியாத மிகையான செய்திகள் காணப்பட்டாலும் இவ்வாலயத்தின் பழமை பற்றி 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த லுயிஸ் என்ற அறிஞர் கூறியிருப்பதன் மூலம் இது ஒரு பழமைவாய்ந்த ஆலயம் என்பது தெரிகிறது. மேலும் இவ்வாலயம் பற்றி யாழ்ப்பாண அரசு தொடர்பாகத் தோன்றிய தமிழ் இலக்கியங்களில் காலத்தால் முந்தி வையாபாடலிலும் கூறப்பட்டிருப்பது இதன் பழமைக்கு மேலும் ஒரு சான்றாகும்.


              இவ்வாலயம் தற்போதைய குடியிருப்புக்களுக்கு பல மைல் தொலைவில் மக்கள் நடமாற்றமற்ற காட்டுப்பகுதியில் காணப்படுகிறது. ஆலயம் முழுமையாக அழிவடைந்த நிலையில் ஆலயத்தின் எச்சங்களே காணப்படுகின்றன. அவற்றில் ஆவுடையும், லிங்கமும் இருப்பதைக் கொண்டு இது ஒரு சிவன் ஆலயம் என்பது தெரிகிறது. ஆயினும் குடியிருப்புக்கள் அற்ற காட்டுப்பகுதியில் உள்ள இவ்வாலய அழிபாடுகளில் இருந்து இவ்வாலயம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மக்களால் கைவிடப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. இவ்வாலயம் கருங்கற்களையும் செங்கட்டிகளையும் கொண்டு அமைக்கப்பட்டதிலிருந்து இது இடைக்காலத்தில் தோன்றிய ஆலயமாகக் கருத இடமுண்டு. அழகான ஆற்றங்கரையோரமாக ஒரு உயர்ந்த மேட்டில் இவ்வாலயம் அமைந்திருப்பது முன்பொருகாலத்தில் செட்டிகுளத்தின் வரலாற்றுப்பழமையின் குறியீடாக இவ்வாலயம் இருந்துள்ளதென்பதை கோடிட்டுக்காட்டுகின்றது.

 

" வன்னியின் வரலாறும் - பண்பாடும் "

 நன்றி - பேராசிரியர் ப. புஸ்பரட்னம்