ஒற்றை ஆட்சிக்குள் அதிகாரங்களை பகிர்வோம் : சபையில் கிரியெல்ல

மொழிப் பிரச்சினைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த தமிழர்களின் போராட்டத்திற்கு உரிய தீர்வினை வழங்காமையின் காரணமாகவே பிரச்சினைகள் நீடிக்கப்பட்டன என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் தேசிய அரசாங்கம் ஒற்றை ஆட்சிக்குள் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதற்கு இணக்கியுள்ளதாகவும் அவர் சபையில் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் 22 சுயாதீன நிறுவனங்களுக்கான செலவுத் தலைப்பிற்கான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், 

தேசிய இனப் பிரச்சினைக்கு 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று தீர்வைக் காண்பதாக முன்னாள் ஜனாதிபதிபதி மகிந்த ராஜபக்ஷ யுத்தத்திற்கு முன்னதாக கூறினார். 

ஆனால் யுத்தத்திற்கு பின்னர் அவர்  தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை தெரிவுக்குழுவே தீர்மானிக்க வேண்டும் என்றார். தற்போது அதனையே நாம் முன்னெடுத்துச் செல்கின்றோம்.

அதிகாரப் பரவலாக்கத்திற்கு நாம் பூரணமாக இணங்கியுள்ளோம். தேசிய அரசாங்கமானது தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்காகவே நிறுவப்பட்டுள்ளது. நாம் ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்களை பரவலாக்குவதற்கு முயற்சிப்போம்.